Elavenil.com - இளவேனில்.காம் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகை
சஞ்சிகையின் நோக்கம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகையானது ஆண்டுக்கு 6 வெளியீடுகளாக வர இருக்கின்றது. இச்சஞ்சிகையானது படிக வளர்ப்பு, படிகவியல், மீநுண்ணறிவியல் மற்றும் மீநுண்பொருளறிவியல், மெல்லேடு, ஆற்றல்சார் பொருட்கள், பொறியியல் சார் பொருட்கள், உயிர்தொழில் நுட்பவியல்,வெப்பம் மற்றும் பொருண்மை பரிமாற்றம், திரவ மற்றும் திட இயக்கவியல், மின்னணுசார் பொருட்கள், குறைகடத்தும் பொருட்கள், கணினி மாதிரி உருவாக்கம், உயிர் வேதியியல், உயிர்ம பொருட்கள், பசுமை வேதியியல், கணிதவியல் மாதிரிஉருவாக்கம், காந்தப் பொருட்கள், செயல்பாட்டு மற்றும் மீசெயல்திறன் பொருட்கள், போன்றவற்றை முக்கிய ஆய்வுபகுதிகளாக கொண்டு வெயிடப்படவுள்ளது.

ஆய்வு கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: strjsanjigai2017@gmail.com


வெளியீடுகள்

அசோ கரிமச்சாயங்களை வெள்ளீயம் (Sn) கலப்பூட்டபட்ட ZnO நானோதண்டுகளைப் பயன்படுத்திக் கண்ணுரு ஒளிவினையூக்கத்தால் சிதைத்தல்

ஜி. பூங்கொடி1,*, ஆர். ராஜேஸ்வரி2

1இயற்பியல் துறை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுரி, சென்னை-600 002

2வேதியியல் துறை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுரி, சென்னை-600 002

ஆய்வுச் சுருக்கம் :

தொழிற்சாலைகளில் இருந்து கட்டுப்பாடற்ற வெளியேற்றங்களின் விளைவாகப் புவியின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் அமைப்புகள் கடுமையாக மாசுபட்டுள்ளன. துணி, தோல் பதனிடுதல், பூச்சிக்கொல்லிகள், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் மருந்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அடர்ந்த நிறத்தோடு, அதிக நச்சுத் தன்மையும், எளிதில் மக்காதவைகளாகவும் உள்ளன. குறிப்பாக, துணி சார்ந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல்வேறு அடர் வண்ணமும் பல வகையான கடினமான மூலக்கூறு கட்டமைப்பும் கொண்ட கரிமச் சேர்மங்களாக உள்ளன. எனவே, ZnO நானோ தண்டுகளைப் பயன்படுத்தி அக்கரிமச் சேர்மங்களைச் சிதைத்து, கழிவு நீரினை செலவு குறைந்த முறையில் பயன்பாட்டு வகையில் மாற்றிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நோக்கில், Sn கலப்பூட்டபட்ட ZnO நானோதண்டுகள் எளிமையான வெப்பநீர்ம (Hydrothermnal) முறையில் தயாரிக்கப்பட்டன. X- கதிர்களின் விளிம்பு (XRD) விளைவுக்குட்படுத்தப்பட்ட Sn கலப்பூட்டபட்ட ZnO நானோதண்டுகளின் படிகக் கட்டமைப்பு அறுங்கோண உற்சைட் (wurtzite) என்று தெரியவந்தது. ZnO அணிக்கோவைத் தளத்தில் Sn-ன் கலப்பு சதவீதம் X-கதிர்களின் ஆற்றல் சிதறடிப்பு நிறமாலையியல் (EDAX) மூலம் கண்டறியப்பட்டது. Sn கலப்பூட்டபட்ட ZnO நானோதண்டுகள் சராசரியாக 1µm நீளமும் 50 முதல் 100 nm விட்டமும் கொண்ட அறுங்கோண வடிவத்துடன் இருப்பது புலவுமிழ்வு எலக்ட்ரான் நுண்ணோக்கி படமாக்கல் (FESEM) மூலம் உறுதி செய்யப்பட்டது. Sn கலப்பூட்டபட்ட ZnO நானோதண்டுகளின் ஆற்றல் பட்டைகளின் இடைவெளி மதிப்பு, ஒளி ஊடுகடத்துதிறன் (300-800 nm அலைநீளத்திற்கு இடையேயான) நிறமாலையிலிருந்து கணக்கிடப்பட்டது. Sn கலப்பூட்டபட்ட ZnO நானோதண்டுகளின் ஒளிவினையூக்கும் செயல்திறன் வெவ்வேறு நிற அசோ கரிமச்சாயங்களைக் கண்ணுரு (365 nm) ஒளியினைக் கொண்டு வளைய ஒளிஉலையில் சிதைப்பத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அசோ சாயங்களின் நிறங்கள் 45 நிமிடங்களில் மாறுவதும், கரிம மூலக்கூறு கட்டமைப்பு 180 நிமிடங்களில் சிதைவதும் உறுதிசெய்யப்பட்டது. தொழிற்துறை தேவைகளைப் பொறுத்து, ஒளிஉலைகளின் அளவுருக்களை மேம்படுத்துவதன் மூலம் நச்சு தன்மையுடைய கரிமச் சாயங்களை சிதைக்க முடியும் என்பதை இவ்வாய்வு புலனாக்குகிறது

முக்கிய வார்த்தைகள்: Sn கலப்பூட்டபட்ட ZnO, நானோதண்டுகள், ஒளிவினையூக்கி செயல்திறன், அசோ சாயங்கள்.

Download PDF

α-Mn2O3 மற்றும் rGo/ α-Mn2O3 நுண்துகள் கட்டமைப்பு

வ. கோவிந்தன், சு. தாட்சாயணி, பி. தவமணி மற்றும் கி. சங்கரநாராயணன்*

இயற்பியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, இந்தியா- 630003.

ஆய்வுச் சுருக்கம் :

அறை வெப்பநிலை சக வீழ்படிதல் முறையில் கனசதுர MnCO3 துகள்கள், Mn2SO4 மற்றும் Na2CO3 நீர்பத திரவங்கள் 1:2 மோலார் விகிதத்தில் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட வெளிர் பழுப்பு நிற MnCO3 துகள்கள் உலர்த்தப்பட்டு பின் 300oC மற்றும் 600oC ஆகிய இரண்டு வெப்பநிலையில் தகுந்த நேர இடைவெளில் வெப்பப்டுத்தப்பட்டது. இந்த நேர மாறுபாடு சீரான கனசதுர α-Mn2O3 துகள் மாறுபாடுகளுக்கு உதவுகின்றது. உருவாக்கப்பட்ட கனசதுர α-Mn2O3 மேலும் பொடிதுகள் X- கதிர்களின் விளிம்பு விளைவுக்கு உட்படுத்தப்படுகின்றது, உருவாக்கப்பட்ட MnCO3, Mn2O3 மற்றும் குறைக்கப்பட்ட கிராபின் ஆக்சைடு கலக்கப்பட்ட Mn2O3 துகள்கள் சாய்சதுர மற்றும் நேர் சாய்சதுர படிக கட்டமைப்புகளைகளாகும். FTIR ஆய்வுகளின் மூலம் பெயரிடப்பட்ட கூட்டு பொருட்களின் மூலக்கூறு அதிர்வுகள் பெறப்பட்டன. உருவாக்கப்பட்ட கனத்துகள்களின் உருவில் நுண்துகள் கட்டமைப்பு எலக்ட்ரான் நுண்ணோக்கியின் படமாக்கல் மூலம் மதிப்பிடப்பட்டது. தனிம தொகுப்பு X- கதிர்களின் ஆற்றல் சிதறடிப்பு நிறமாலையின் மூலம் பெறப்பட்டது. மின் வேதியல் செயல்பாடுகள் CV அளவீடுகளின் மூலம் மதிப்பிடப்பட்டது. rGo கலந்த Mn2O3 ஆனது தூய்மையானதைவிட அதிக வீச்சு மின்னழுத்தம் கொண்டுள்ளது. AC மின்மறுப்பு அளவீட்டிலிருந்து rGo சேர்த்த Mn2O3 மிக குறைந்த Rct மதிப்பு கொண்டுள்ளதை அறியலாம் இது கடத்தும் rGo வை Mn2O3 அணியில் சேர்த்ததினால் கிடைக்கின்றது. கிடைக்கப்பெற்ற குறைந்த மின்தடை மற்றும் துளை அமைப்பு கட்டமைப்பானது உணரி துறையில் பயன்படலாம்.

முக்கிய வார்த்தைகள் : MnCO3, கனசதுர α-Mn2O3, சக வீழ்ப்படிதல், மின்வேதியல் பகுப்பாய்வு

Download PDF

கோமாரின்களின் [2H-1-பென்சோபிரான் -2-வோன்] மூலக்கூறுக்கான கட்டமைப்பு, மின்னூட்ட அடர்த்தி மற்றும் மூலக்கூறு பொருந்துதல் பண்பு ஆகியவற்றை குவாண்டம் வேதிக்கணிப்புகளின் வழியாக ஆய்வு செய்தல்

P. ஸ்ரீனிவாசன்1,*, A. டேவிட் ஸ்டீபன்2,*, G. ராஜலக்ஷ்மி3

1இயற்பியல் துறை, சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி, ஈரோடு, தமிழ் நாடு, இந்தியா

2இயற்பியல் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா

3இயற்பியல் துறை, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தர்மபுரி, தமிழ் நாடு, இந்தியா

ஆய்வுச் சுருக்கம் :

கோமாரின் [2H-1-பென்சோபிரான்-2-வோன்] பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு முகவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கோமாரின் சைட்டோக்ரோம்P450 உடன் பொருந்தும் விதம் (docking analysis) ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. அடர்த்தி செயல்பாட்டு கோட்பாட்டு (density functional theory (DFT)) முறைகளில் ஒன்றான 6-311G** அடிப்படை தொகுப்பின் உதவியுடன் 2H-1-பென்சோபிரான்-2-வோன் மூலக்கூறின் உகந்த வடிவியல் மற்றும் மின்னூட்ட அடர்த்தி ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், சைடோக்ரோம்P450-உணர்வாங்கியின் தூண்டப்பட்ட தளங்களில் 2H-1-பென்சோபிரான்-2-வோன் பொருந்துவதால் ஏற்படும் ஒருங்கிணைந்த மாற்றம் மற்றும் மின்னாற்பாட்டு பண்புகளை புரிந்து கொள்ள மூலக்கூறு பொருத்துதல் ஆய்வு (molecular docking analysis) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூலக்கூறு மின்நிலைஅழுத்தம் (Molecular Electrostatic Potential (MEP)) என்பது கோமாரின் [2H-1-பென்சோபிரான்-2-வோன்]-ல் மின்துகள் பரவல் அறிவதுக்கு மிகவும் பயனுள்ள ஆய்வாகும்.

முக்கிய வார்த்தைகள் : அடர்த்தி செயல்பாட்டு கோட்பாடு (DFT), மூலக்கூறு பொருத்துதல் ஆய்வு, மின்னூட்ட அடர்த்தி, இருமுனை திருப்புத்திறன் மற்றும் மின்நிலைஅழுத்தம் (ESP)

Download PDF

மாற்றியமைக்கப்பட்ட செங்குத்து பிரிட்ஜ்மேன் முறை மூலம் வளர்க்கப்பட்ட CdGa2Se4 தனிப்படிகத்தின் பொருளாக்கம், வளர்ப்பு மற்றும் இயற்பியல் பண்புகள் பற்றிய ஆய்வு

ப.விஜயகுமார், மு.மகேசு மற்றும் பெ. இராமசாமி

படிக வளர்ப்பு மையம், இயற்பியல் துறை, எஸ்.எஸ்.என் தொழில் நுட்பக் கல்லூரி, காலவாக்கம், சென்னை, தமிழ்நாடு -603110

ஆய்வுச் சுருக்கம் :

CdGa2Se4 பல்படிக பொருளானது உருக்கு அலைவு முறையில் பொருளாக்கம் செய்யப்பட்டது. நல்ல தரமான CdGa2Se4 தனிப்படிகமானது மாற்றியமைக்கப்பட செங்குத்து பிரிட்ஜ்மேன் முறை மூலம் வளர்க்கப்பட்டது. படிக கட்டம் மற்றும் வளர்ச்சி திசைமுகமானது நுண்துகள் X-கதிர் விளிம்பு விளைவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அலகு செல் அளவுருக்கள் ஒற்றை படிக X-கதிர் விளிம்பு விளைவு பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. CdGa2Se4 வேதிச்சமானமானது ஆற்றல் சிதறல் நிறமாலையைப் பயன்படுத்தி அளவிடப்பட்டது. CdGa2Se4 ன் சீரான கட்டமைப்பு அறை வெப்பநிலையில் இராமன் சிதறல் நிறப்பிரிகை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. CdGa2Se4 . தனிப்படிகத்தின் அண்மை அகச்சிவப்புப் பகுதி உட்கவர் விளிம்பானது 680 நா.மீ-க்கு அருகில் உள்ளது என்பதை ஊடுருவுத்திறன் நிறமாலை மூலம் கண்டறியப்பட்டது. ஒளியியல் பட்டை இடைவெளியின் மதிப்பு 1.8 ev யென கணக்கிடப்பட்டது. CdGa2Se4-ன் வெப்பப் பண்பானது வகையீட்டு வெப்பஅளவு மூலம் கண்டறியப்பட்டது. வெப்ப விரவுதிறன், தன்வெப்பம், வெப்பக் கடத்துத் திறன் ஆகியவை அளவிடப்பட்டன. ஹால் விளைவு மூலம் மின் பண்பு மற்றும் n-வகை குறைகடத்தி பண்புகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஒளி படு-மின்துகள் கடத்துத் திறன் அளவீடானது நேர்மறை ஒளிபடு-மின்துகள் கடத்து திறன் பண்பை உறுதி படுத்துகிறது.

முக்கிய வார்த்தைகள் : பண்பறிதல், உருக்கிலிருந்து வளர்த்தல், கனிம சேர்மம், நேர் சார்பிலா ஒளியியல் பொருள், குறைக்கடத்தும் இண்டியம் சேர்மம்.

Download PDF

சுற்றுச்சூழலுக்கு உகந்த காட்மியம் சல்பைடு துணுக்கப்புள்ளி பொருளாக்கம்

வி.பி.தேவராஜன்1,2,*, டீ. நடராஜ்2, பி. பெரியசாமி3, கே.வித்யா4, டி.பழனிவேல்2,5, ஒய்.ஏ. சையத் காதர்1

1இயற்பியல் துறை, கே‌.எஸ்.‌ஆர்.‌ மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு

2மென்படல & மீநுண்ணிய பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

3இயற்பியல் துறை, எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, குமாரபாளையம்

4இயற்பியல் துறை, ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சேலம் - 636 016, தமிழ்நாடு, இந்தியா

5இயற்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011, தமிழ்நாடு, இந்தியா

ஆய்வுச் சுருக்கம் :

இந்த ஆய்வில், காட்மியம் சல்பைடு துணுக்கப்புள்ளியானது (Quantum Dots) புதிதாக எளிமையான வேதியியல் முறையை பயன்படுத்தி அறை வெப்பநிலையில் மூடபப்டாத (uncapped) மற்றும் பல்படி மூடிய (polymer capped) காட்மியம் சல்பைடு துணுக்கப்புள்ளி தயாரிக்க முயற்சி செய்யப்பட்டது. மேலும் அவைகளின் கட்டமைப்பு மற்றும் ஒளியியல் பண்புகளானது X-கதிர் விளிம்பு விளைவு(XRD), செலுத்தும் மின்னணு நுண்நோக்கியல்(TEM), ஃபூரியர் உருமாற்று அகச்சிவப்பு நிறமாலை (FTIR), புற ஊதா பகுதி-கட்புல(UV-VIS) மற்றும் ஒலிமுறை ஒளிர்வு (PL) ஆகிய ஆய்வுகள் மூலம் ஆராயப்பட்டன. XRD பகுப்பாய்விலிருந்து கனசதுர-அறுகோண (cubic-hexagonal) படிக அமைப்பு கண்டறியப்பட்டது. செலுத்தும் மின்னணு நுண்நோக்கி பகுப்பாய்விலிருந்து, கோள வடிவமாக (spherical shape) வளர்ந்துள்ள வடிவ மேற்பரப்பு உருமாற்றம் காணப்பட்டது, அவைகளின் அளவுகள் 3-5 nm வரை வளர்ந்துள்ளன. ஃபூரியர் உருமாற்று அகச்சிவப்பு நிறமாலை பகுப்பாய்விலிருந்து, எல்-சிஸ்டேன் (L-Cysteine) மற்றும் CdS துணுக்கப்புள்ளி ஆகியவற்றுக்கு இடையேயான வேதிவினைதொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. புற ஊதா பகுதி-கட்புல பகுப்பாய்விலிருந்து, துணுக்க தடுப்பு விளைவு (quantum confinement effect) காரணமாக ஒரு மேம்பட்ட உறிஞ்சுதல் இயல்பு தன்மை ஏற்பட்டுள்ளது. ஒலிமுறை ஒளிர்வு பகுப்பாய்விலிருந்து, சிறிய அளவிலான துகள்கள் வளர்ந்ததன் காரணமாக நீல உமிழ்வு நோக்கிய (blue-shift) நடத்தை மாற்றம் காணப்பட்டது. எனவே, தயாரிக்கப்பட்ட CdS துணுக்கப்புள்ளியானது ஒளி-மின்னணு (opto-electronic) மற்றும் உயிர்-படிவமாக்கல் (Bio-imaging) பயன்பாடுகளுக்கு ஏற்றதென கருதப்படுகிறது.

முக்கிய வார்த்தைகள் : CdS, உமிளும் துணுக்கப்புள்ளி, சுற்றுச்சூழல் நட்பு வழி

Download PDF

பிரிடின் பெருமூலக்கூறு கூட்டங்களின் மீதான ஆய்வும் அதை சார்ந்த கரிம படிகங்களின் நேர்சார்பிலா ஒளியியல் பயன்பாடுகளும்

ரோ.மு. ஜாகர், ப. முருககூத்தன்*

பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம் (MRDL), முதுகலை மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 600 030

ஆய்வுச் சுருக்கம் :

தற்போதைய ஆய்வில் 2-அமினோ 4, 6 டைமிதாக்ஸிபிரிடைன் ப-டொலுவின்ஸல்போனிக் அமிலம் மோனோஹைட்ரேட் (2ADPTS), 2, 6 டைஅமினோ பிரிடினியம் டொஸிலேட் (2,6DPT), ஐசோ நிகோடினமிடியம் பிக்ரேட் (ISPA) மற்றும் 2-அமினோபிரிடினியம் டைபினைல்அசிடேட்டைபினைல்அசிடிக் அமிலம் (2APD) ஆகிய படிகங்கள் பெற மெதுவாக ஆவியாதல் கரைசல் நுட்பம் (SEST) மூலமாக வளர்க்கப்பட்டுள்ளது. கட்டுமான நேரியல் மற்றும் நேர்சார்பிலா ஒளியியல், வெப்ப மற்றும் லேசர் சேதம் போன்ற சோதனை மூலம், வளர்ந்த படிகங்களின் அத்தியாவசிய பண்புகள் ஆராயப்பட்டுள்ளன.

Download PDF

நஞ்சு புரதங்களின் செயல்தன்மைகளும் அதன் மருத்துவ பயன்பாடுகளும்

கிறிஸ்டியன் பாரதி, சையது இப்ராஹிம்

உயிர் தகவலியல் மையம், புதுவை பல்கலைக்கழகம்-605014

ஆய்வுச் சுருக்கம் :

நஞ்சுள்ள விலங்குகள், மனிதன் மற்றும் விலங்குகள் உயிர் வாழ்வதற்கான சவாலாக விலங்குகின்றது. உலகம் முழுவதும் வருடத்திற்க்கு 1.45 மில்லியன் மக்கள் பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கஸ்தூரிரத்னாவின் (2008) ஆராய்ச்சி முடிவின் படி 20,000 முதல் 94,000 பேர் பாம்பு கடியால் இறக்கின்றனர். மேலும், நஞ்சு முறிவு மருந்துகளின் (antivenom) விலை அதிகமாக இருப்பதாலும் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கபடாமலும் ஆஃப்ரிக்காவின் பல்வேறு ஏழை நாடுகளில் அதிகமான எண்ணிக்கையில் மரணங்கள் ஏற்படுகின்றன. நஞ்சு கடிக்கு பின் உயிர்க்கொல்லும் தன்மைக்கொண்ட நச்சு புரதங்களின் செயல்பாடுகளை தடுக்கும் மூலக்கூறுகளை கண்டுபிடிக்கவும் அதை அதிக அளவில் அதை உற்பத்தி செய்து உலகிலுள்ள அனைவரின் பயன்பாட்டுக்கும் உயிர்களை காக்கும் பொருப்பு நம் அனைவருக்கும் உள்ளது.அதே வேளையில், நஞ்சு புரதங்ளையும் குறிப்பிட்ட நச்சுகளின் உயிர்வேதி இயல்புகளையும் தனித்தன்மையையும் அறிந்து புரத பொறியியலில் (protein engineering) ஆராய்ச்சி மேற்கொள்வதின் மூலமாக அவற்றை உயிர் காக்கும் மருந்துகளாக பயன்படுத்தலாம். இந்த கட்டுரையானது நஞ்சு புரதங்கள் மற்றும் அவற்றின் செயல் பண்புகள் பற்றிய விரிவான பார்வையையும் அதிலிருந்து கண்டுபிடிக்கபட்டு தற்காலிக பயன்பாட்டிலுள்ள மருந்துகளின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மீள்பார்வை நஞ்சு புரதங்களின் உயிரியல் மற்றும் உடலியலில் அவற்றின் செயல்பாடுகளையும் மூலக்கூறு பண்புகளையும் விரிவாக விளக்குகின்றது. இயற்கை மூலத்திலிருந்து கிடைக்கும் மிகச் சரியான வேதிப்பொருளை நச்சு புரதங்களின் செயல்பாடுகளை தடுக்கும் காரணிகளை கண்டறியலாம். மற்றொன்ரு, பல்வேறு நோய் தீர்க்கும் மருந்துகளை பாம்புகளின் நஞ்சில் இருந்து கண்டறிந்து மருந்தாதக பயன்படுதலாம்.

முக்கிய வார்த்தைகள் : நஞ்சு பரவலுக்கான காரணிகள், நஞ்சு புரதங்கள், புற்று நோய் வளர்ச்சி, இரத்தம் உறைதல், இரத்த இழையை சிதைத்தல்

Download PDF